தமிழ்நாடு

நாளையுடன் சிறப்பு முகாம் நிறைவு- சென்னையில் 9.25 லட்சம் குடும்ப தலைவிகள் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பம்

Published On 2023-08-19 06:50 GMT   |   Update On 2023-08-19 06:50 GMT
  • சென்னையில் உள்ள 1,428 ரேஷன் கடைகளின் அடிப்படையில் 1,428 அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட விண்ணப்பங்களை அதற்குரிய அதிகாரி நேரில் சென்று விசாரிப்பார்.

சென்னை:

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய சிறப்பு முகாம்கள் 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. விடுப்பட்டவர்களுக்கு நேற்று முதல் சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை)யுடன் சிறப்பு முகாம்கள் நிறைவடைவதால் இதுவரையில் மனு கொடுக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 கட்ட முகாம்களிலும் விண்ணப்பிக்காத ஒரு சிலர் மட்டுமே தற்போது முகாம்களில் மனு கொடுத்து வருகின்றனர்.

சென்னையில் இதுவரையில் 12 லட்சம் பெண்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம் நாளை மாலையுடன் முடிகிறது. இனிமேல் சிறப்பு முகாம்கள் நடத்த வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் விண்ணப்பங்கள் தொடர்ந்து வாங்கப்படும். எந்த அலுவலகத்தில் மனு கொடுப்பது என்ற விவரத்தை அரசு அறிவிக்கும். தகுதி உள்ள பெண்களிடம் தொடர்ந்து விண்ணப்ப படிவம் வாங்கப்படும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமர்பிக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்கள் 23-ந்தேதி முதல் ஆய்வு செய்யப்படும். இந்த பணி 30-ந்தேதி வரை நடைபெறும். மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்த மனுக்களில் முறையான ஆவணங்கள், தகவல் இல்லாத குடும்பத் தலைவியின் வீடுகளில் மட்டுமே ஆய்வு செய்யப்படும்.

படிவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் முழுமையாக எவ்வித சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருந்தால் அத்தகைய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அவர்களின் வீடுகளுக்கு கள ஆய்வு நடத்த தேவை இல்லை.

சென்னையில் உள்ள 1,428 ரேஷன் கடைகளின் அடிப்படையில் 1,428 அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட விண்ணப்பங்களை அதற்குரிய அதிகாரி நேரில் சென்று விசாரிப்பார். வங்கி கணக்கு தகவல், மின்சார கட்டண ரசீது, ஏற்கனவே உதவி தொகை வாங்குபவரா? என்பது போன்ற தகவல் உறுதி செய்யப்படும். சந்தேகம் இருக்கும் மனுக்களின் வீடுகளில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News