தமிழ்நாடு

பாம்பை கொன்று சமைத்து சாப்பிட்ட வாலிபர் கைது- சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதால் நடவடிக்கை

Published On 2024-06-13 02:08 GMT   |   Update On 2024-06-13 02:08 GMT
  • ராஜேஷ்குமாரை பிடித்து விசாரணை செய்ததில், 3 நாட்களுக்கு முன்பு பாம்பை கொன்று அதனை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.
  • வன விலங்கை கொன்றது, அதனை சமைத்து வீடியே எடுத்தது ஆகிய காரணத்திற்காக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம், பெருமாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 30). இவர், 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து கொன்று, பின்னர் அதன் தோலை உரித்து உடலை தண்ணீரில் அலசுவதும், அதன் பிறகு பாம்பை துண்டு, துண்டாக வெட்டி சமையலுக்கு தயார் செய்வதையும் அத்துடன் இதை சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதன் இறைச்சி மிகவும் சத்துமிக்கது என்றும் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் மற்றும் வனத்துறையினர் பெருமாப்பட்டு கிராமத்துக்கு சென்று, ராஜேஷ்குமாரை பிடித்து விசாரணை செய்ததில், 3 நாட்களுக்கு முன்பு பாம்பை கொன்று அதனை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து வன விலங்கை கொன்றது, அதனை சமைத்து வீடியே எடுத்தது ஆகிய காரணத்திற்காக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வனவிலங்குகளை துன்புறுத்துதல், கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ராஜேஷ்குமார் சாரைப்பாம்பை கொன்று, அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்டுள்ளார். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்து உள்ளார். இது கடுமையான குற்றமாகும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Tags:    

Similar News