தமிழ்நாடு

டீக்கடை உட்பட 200 தொழில்கள் மீது வரி அதிகரிப்பு- மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும்

Published On 2024-07-31 09:16 GMT   |   Update On 2024-07-31 09:16 GMT
  • சென்னையில் அரையாண்டுக்கான தொழில்வரி 35 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
  • கட்டண உயர்வின் காரணமாக பல தொழில்கள் முடங்கும் நிலை ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை:

சென்னையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தொழில்வரி மற்றும் வணிக நிறுவனங்களுக்கான உரிமம் கட்டணம், விளையாட்டு கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழில்கள் மீது வரிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் டீ கடை, சலூன், மளிகை கடை, விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் உரிமம் கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையில் இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு தொழில்வரி திருத்தி அமைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் அரையாண்டுக்கான தொழில்வரி 35 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் உரிமம் கட்டணத்தை பொருத்தவரை குறு தொழில்களுக்கு ரூ.3,500 முதல் ரூ.7 ஆயிரம், சிறு தொழில்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம், நடுத்தர தொழில்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம், பெரிய வணிகங்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உரிமம் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. வணிக நிறுவனங்களுக்கு உரிமம் கட்டணம் 150 சதவீதமும், சிறிய கடைகளுக்கு குறைந்தபட்சம் 50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த தொழில்வரி மற்றும் உரிமம் கட்டணம் அதிகரிப்பு காரணமாக சென்னை மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். அதே நேரத்தில் இந்த கட்டண உயர்வால் 200-க்கும் மேற்பட்ட தொழில்கள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக விருந்தோம்பல், திருமணம்தொ டர்பான சேவைகள், பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகிய தொழில்கள் பாதிக்கப்படும்.

விருந்தினர் இல்லங்கள், சேவை அடுக்குமாடி குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், ஓய்வு விடுதிகள் ஆகியவற்றுக்கு இதுவரை கட்டணம் கிடையாது. இனி இவற்றுக்கு ஆண்டுக்கு 1,000 சதுர அடிக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் இதில் தங்குவதற்கான வாடகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மேலும் 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள திருமண மண்டபங்களுக்கு இதுவரை ஆண்டு கட்டணம் ரூ.4 ஆயிரமாக இருந்தது. அது இனி ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதனால் இனி திருமண மண்டப வாடகையும் அதிகரிக்கும். டீ கடைகள், காபி கடைகள், உணவகங்கள், உணவு சாப்பிடும் மெஸ்கள் ஆகியவற்றுக்கு 1,000 சதுர அடிக்கு இதுவரை ரூ.2,500 ஆக இருந்த கட்டணம் இனி ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதுவே 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களுக்கு இதுவரை ரூ.10 ஆயிரமாக இருந்த கட்டணம் இனி ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

மேலும் தற்போது வாகன நிறுத்த கட்டணம் புதிதாக வசூலிக்கப்பட உள்ளது. 1,000 சதுர அடி வரையிலான வாகன நிறுத்துமிடத்துக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,000 சதுர அடிக்கு மேல் உள்ள இடங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சலூன்களுக்கு உரிமம் கட்டணம் ரூ.200 முதல் ரூ.10 ஆயிரம் வரையும், அழகு நிலையங்களுக்கு ரூ.500 முதல் ரூ.6 ஆயிரம் வரையும் உயர்த்தப்படுகிறது. ஸ்பாக்களுக்கு ரூ.25 ஆயிரம் உரிமக்கட்டணம் உள்ளது.

செல்போன் கடைகள், புகைப்பட ஸ்டூடியோக்கள், சிறிய கடைகள் ஆகியவற்றுக்கு வருடாந்திர உரிமம் கட்டணம் ரூ.3 ஆயிரமாக உள்ளது. மேலும் ஓட்டல்கள், பேக்கரிகள், சினிமா தியேட்டர்கள், தங்கும் விடுதிகள், சலவை கடைகள் மற்றும் சந்தைகளுக்கு உரிமத்தை புதுப்பிக்கவும், ரத்து செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வின் காரணமாக பல தொழில்கள் முடங்கும் நிலை ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கட்டண உயர்வானது பொதுமக்களின் தலையில் சுமத்தப்படும் நிலையும் உருவாகும். எனவே கட்டண உயர்வு காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு தொழில்வரி மற்றும் உரிமம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதன் மூலம் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். பின்னர் அந்த சுமையை அவர்கள் பொதுமக்களின் மீதே சுமத்த வேண்டி இருக்கும். திருமண மண்டபங்களுக்கு உரிமம் கட்டணம் அதிகமாக கூடியுள்ளது. இதனால் திருமண மண்டபங்களில் இனி வாடகையை உயர்த்தும் நிலை ஏற்படும். இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

உணவகங்களின் உரிமம் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் ஓட்டல்களில் உணவு வகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது. டீக்கடைகள், சலூன்களின் கட்டமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான செலவுகள் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News