இலங்கை வீரர் உயிரிழப்பு: கொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 10 தமிழக மீனவர்கள்
- திங்கட்கிழமை தமிழக மீனவர்களை கைது செய்யும்போது இலங்கை கடற்படை வீரர் காயம் அடைந்தார்.
- சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராமேஸ்வரம் அருகே கட்சத்தீவுக்கு அருகில் மீன்பிடிக்க செல்லும்போது, எல்லையை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படையினர் மீனர்வர்களை கைது செய்வதுடன், படகையும் பறிமுதல் செய்து விடுவார்கள்.
கடந்த திங்கட்கிழமை நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் வேகமாக படகில் வந்து மீனவர்கள் படகை சுற்றி வளைத்தனர். அப்போது மீனவர்கள் படகு மீது இலங்கையின் ரோந்து படகு மோதியதாக கூறப்படுகிறது. இதில் இலங்கை கடற்படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே 10 மீனவர்களை கைது செய்ததுடன் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு எதிராக "பி" அறிக்கை தயார் செய்து காங்கேசன்துரை போலீசார் ஜாஃப்னாவில் உள்ள மல்லாகாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை கடற்பகுதியில் சட்ட விரோதமாக மீன் பிடித்ததாகவும், நடவடிக்கையின்போது கடற்படை வீரர் சாவுக்கு காரணமாக இருந்ததாகவும், கடற்படை சொத்தை சேதப்படுத்தியதாகவும் வழக்கு தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இதனால் 10 தமிழக மீனவர்களும் கொலைக்காரணத்திற்கான வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை வீரரின் சாவு ஒரு விபத்து, அவரது முதுகுத் தண்டில் ஏற்பட்ட சேதம் சாவுக்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வருடம் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்ததாக 200-க்கும் அதிகமான மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 27 படகுகளை பறிமுதல் செய்துள்ளது. கடந்த வருடம் 240 மீனவர்களை கைது செய்தது. 35 படகுகளை பறிமுதல் செய்தது.