சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
- காரில் சோதனை செய்த போது கணக்கில் வராத ரூ.11 லட்சம் ரொக்கப்பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
- லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் 10 அதிகாரிகள் இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர்:
பள்ளிப்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய சார்பதிவாளர் ஸ்ரீதர் கடந்த சில நாட்களாக விடுமுறையில் உள்ளார். இதைத்தொடர்ந்து பேரம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய மோகன்ராஜ் என்பவர் பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பொறுப்பு சார்பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மோகன்ராஜ் தனது காரில் கணக்கில் வராத பணத்தை எடுத்து செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராம மூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா உள்ளிட்டோர் விரைந்து சென்றனர். இதற்குள் மோகன்ராஜ், தனது காருக்கு பெட்ரோல் நிரப்ப சென்றபோது குமாரராஜு பேட்டை கிராமத்தில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது காரில் சோதனை செய்த போது கணக்கில் வராத ரூ.11 லட்சம் ரொக்கப்பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து மோகன்ராஜை பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மற்றும் விசாரணை நேற்று இரவு 11 மணிவரை நடைபெற்றது.
இதற்கிடையே இன்று காலை 7 மணி முதல் திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள சார்பதிவாளர் மோகன்ராஜின் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் 10 அதிகாரிகள் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். வீட்டில் உள்ள ஆவணங்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.