தமிழ்நாடு (Tamil Nadu)

நாய்கள் கடித்து இறந்த ஆடுகளை பாடை கட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தூக்கி வந்த விவசாயிகள்

Published On 2024-09-27 07:27 GMT   |   Update On 2024-09-27 07:27 GMT
  • காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கி இறந்த ஆடுகளை பாடை கட்டி தூக்கி வந்தனர்.
  • விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்களால் ஆடுகள் தொடர்ந்து வேட்டையாட்டப்பட்டு வருகிறது. ஆடுகளை கடித்து கொன்று வருவதால், கால்நடை விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் வீராணம்பாளையம் செந்தில்குமார் என்பவருக்கு தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான 7 ஆடுகள் உயிரிழந்தன.

இந்நிலையில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். தொடர்ந்து காங்கயம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடையவே, இன்று ஆடுகளை பாடை கட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று காலை காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கி இறந்த ஆடுகளை பாடை கட்டி தூக்கி வந்தனர்.

திருப்பூர் மாநகர எல்லையான நல்லூர் சிக்னல் அருகே வரும் போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள், பாடை கட்டி தூக்கி வந்த இறந்த ஆடுகளை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இப்பிரச்சனை எதிரொலித்தது.

Tags:    

Similar News