தமிழ்நாடு (Tamil Nadu)

சனாதன கருத்தரங்கில் பங்கேற்க முதலாவதாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தவறானது- கல்லூரி முதல்வர் ராஜாராமன் விளக்கம்

Published On 2023-09-14 11:27 GMT   |   Update On 2023-09-14 11:27 GMT
  • கருத்தரங்கில் தங்களது கல்லூரியில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
  • எழுத்து பிழை காரணமாக சனாதன எதிர்ப்பு என்று தவறாக கூறப்பட்டுவிட்டது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, திரு.வி.க கல்லூரியின் முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நாளை (வெள்ளிக்கிழமை) காட்டூர் கலைஞர் கோட்டத்தில் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் தங்களது கல்லூரியில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில், சனாதன எதிர்ப்பு குறித்த தங்களது கருத்துக்களை கலைஞர் கோட்டத்தில் நடைபெறும் கருத்தரங்கில் தெரிவிக்குமாறு கூறி, கல்லூரி முதல்வரின் கையொப்பமிட்ட சுற்றறிக்கை மாணவர்களுக்கு அனுப்பட்டு இருந்தது. இந்த சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், மாணவர்களுக்கு திருத்தப்பட்ட சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சனாதனம் பற்றிய தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கேட்டு கொள்ளப்பட்டது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜாராமனிடம் கேட்டபோது:-

முதலாவதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தவறாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. அதில் சனாதனம் பற்றிய கருத்துக்களை தெரிவிக்கும்படி தான் கூறப்பட வேண்டி இருந்தது. ஆனால் எழுத்து பிழை காரணமாக சனாதன எதிர்ப்பு என்று தவறாக கூறப்பட்டுவிட்டது.

மேலும், எங்களது கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவோ, எதிராகவோ செயல்படவில்லை. சனாதனம் பற்றி கருத்து சொல்வதற்கும், சொல்லாமல் இருப்பதற்கும் மாணவர்களுக்கு உரிமை உண்டு. எனவே, இந்த சுற்றறிக்கை திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பெயரிலே செயல்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது என்றார்.

Similar News