தமிழ்நாடு

கிராமத்தில் வாழ்ந்த கடைசி முதியவரும் உயிரிழந்தார்- அடக்கம் செய்ய ஊர் திரும்பிய மக்கள்

Published On 2024-05-30 04:58 GMT   |   Update On 2024-05-30 04:58 GMT
  • கடந்த 10 ஆண்டுகளாக கந்தசாமி தனியாக வசித்து வந்தார்.
  • கிராமத்தில் வாழ்ந்த கடைசி மனிதரான கந்தசாமியும் மரணமடைந்துவிட்டதால் மனிதர்கள் யாரும் வசிக்காத இடமாக மாறி உள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்து உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269 ஆகும். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயம் பொய்த்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து உள்ளனர்.

இதனால் ஊரில் இருந்து மக்கள் ஒவ்வொருவராக, வீடு, விவசாய நிலம் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு, ஊரை காலி செய்து வெளியூருக்கு சென்று குடியேறிவிட்டனர். ஆனால் கந்தசாமி (வயது 75) என்பவர் மட்டும் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக கந்தசாமி தனியாக வசித்து வந்தார்.

மீனாட்சிபுரம் ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள் மீண்டும் ஊருக்கு வர வேண்டும். ஊர் செழிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்த கந்தசாமி கடந்த 26-ந்தேதி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மட்டுமின்றி, அந்த ஊரில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானவர்கள் கிராமத்துக்கு வந்து கந்தசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு அருகில் உள்ள சிங்கத்தாகுறிச்சியில் நடத்தப்பட்டு, மீனாட்சிபுரம் கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இவரது இறப்பு, இந்த ஊரை பூர்வீகமாக கொண்ட இளைஞர்களுக்கு, அவர்களது அப்பா, தாத்தா வாழ்ந்த ஊரை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது என்று மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளனர். அந்த கிராமத்தில் வாழ்ந்த கடைசி மனிதரான கந்தசாமியும் மரணமடைந்துவிட்டதால் மனிதர்கள் யாரும் வசிக்காத இடமாக மீனாட்சிபுரம் மாறி உள்ளது.

Tags:    

Similar News