தமிழ்நாடு

பழவேற்காடு நண்டுக்கு மவுசு அதிகரிப்பு- கிலோ ரூ.800 வரை விற்பனை

Published On 2023-08-02 06:13 GMT   |   Update On 2023-08-02 06:13 GMT
  • 10 ஆயிரம் மீனவர்களுக்கு இது முக்கிய வாழ்வாதார இடமாக உள்ளது.
  • பழவேற்காடு ஏரியில் பிடிக்கப்படும் நண்டு, இறால்களுக்கு தனி சுவை உண்டு.

பொன்னேரி:

பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை சுற்றி 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித்து வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் மீனவர்களுக்கு இது முக்கிய வாழ்வாதார இடமாக உள்ளது.

இங்கு 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள்,இறால்,நண்டுகள், பிடிபட்டு வருகிறது. பழவேற்காடு மீனுக்கு என்று தனி மவுசு உண்டு. பெரும்பாலும் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக விற்பனைக்கு கரைக்குகொண்டு வரப்படுவதால் ஐஸ்கட்டிகளில் பதப்படுத்தாமல் உடனடியாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பழவேற்காடு மீன்களை வாங்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இதனால் பழவேற்காட்டில் மீன்விற்பனை களைகட்டி காணப்படுகிறது.

மேலும் பழவேற்காடு ஏரியில் பிடிக்கப்படும் நண்டு, இறால்களுக்கு தனி சுவை உண்டு. இதனால் இங்குள்ள நண்டு, இறால்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஏரியில் பிடிக்கப்படும் நண்டுகள் சணல் மூலம் உயிருடன் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டு நண்டு மிகவும் பெயர் போனவை. ஒரு நண்டு 50 கிராம் முதல் 11/2 கிலோவிற்கு மேல் இருக்கும்.

பழவேற்காடு நண்டுக்கு தற்போது மவுசு மேலும் அதிகரித்து உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பழவேற்காடு பகுதிக்கு வந்து தங்களுக்கு பிடித்தமான பெரிய நண்டுகளை வாங்கி செல்கிறார்கள். ஒரு கிேலா நண்டு ரூ.400 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.

ஒரு கிலோவுக்கு மேல் உள்ள நண்டு ரூ.2 ஆயிரத்து 200 வரை விலை போகிறது.

இதுகுறித்து நண்டு வியாபாரி ராஜா, சங்கீதா ஆகியோர் கூறும்போது, பழவேற்காடு நண்டுக்கு என தனி சுவை உண்டு. இதனால் இங்கு பிடிபடும் நண்டுகளை அதிகம் பேர் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இப்போது பழவேற்காடு நண்டுகளை வாங்க அதிகாமானோர் வந்து செல்கிறார்கள். நண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் நாள்பட்ட சளி குறையும்.ஒரு நண்டு ஒரு கிலோவிற்கு மேல் இருந்தால் கிலோ 2200 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. பெரியவகை நண்டுகளின் கொடுக்குகளை அதன் உடம்புடன் சனலை வைத்து கட்டி விற்பனை செய்யப்படுகின்றன. இவை மிகவும் ஆபத்தானது. விரலை கடித்தால் துண்டாகி விடும் ஆபத்து உள்ளது. பழக்கம் உள்ளவர்கள் இதனை எளிதில் கையாள முடியும் என்றனர்.

Tags:    

Similar News