போலீசார் சோதனையில் நிற்காமல் சென்ற வாகனம்- பூந்தமல்லியில் பரபரப்பு
- குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகத்திற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் போலீசாரும் , அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டு குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பூந்தமல்லி அருகே போலீசார் வாகன சோதனையின் போது வாகனம் ஒன்று நிற்காமல் சென்றது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நிற்காமல் சென்ற வானகத்தை சினிமா பாணியில் விரட்டி சென்றனர். ஆனால் நசரத்பேட்டை சிக்னலில் அந்த வாகனம் விபத்தில் சிக்கியது.
போலீசார் பார்த்ததும் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், ஒரு டன் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
குட்கா பொருட்களுடன் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.