ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்கும் - திருமாவளவன்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று கோவை வந்தார்.
- தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இடையில் எந்த சிக்கலும் எழாது. சிக்கலும் எழுவதற்கு வாய்ப்பு இல்லை.
கோவை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி இல்லாமல் வடமாவட்டங்களில் தி.மு.க. வெல்ல முடியாது.
40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் ஏன் துணை முதல்-அமைச்சர் ஆகக்கூடாது? என பல்வேறு கருத்துகளையும் அதில் தெரிவித்து இருந்தார்.
இவரது இந்த கருத்துக்கு தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பதிலடி கொடுத்திருந்தார். ஆதவ் அர்ஜூனா மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய 2 கூட்டணி கட்சிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை. விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாகுவதற்கு வாய்ப்பும் இல்லை.
என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான ஒரு சின்ன வீடியோ, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை விவாதத்துக்கு பலரும் எடுத்துக் கொண்டனர். அது மேலும் மேலும் விவாதத்துக்கு வழிவகுத்து விட்டது.
அதனால் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இடையில் எந்த சிக்கலும் எழாது. சிக்கலும் எழுவதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜூனா மீது ஆ.ராசா எம்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறாரே? அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு திருமாவளவன் பதில் அளித்து கூறும்போது, கட்சியில் உள்ள முன்னணி தோழர்களோடு கலந்து பேசி தான் எந்த நடவடிக்கையும் இருக்கும். கட்சி விவகாரங்களை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர், உயர்நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ள தோழர்களுடன் தொலைபேசி மூலமாக பேசி இருக்கிறேன். மீண்டும் கலந்து பேசி நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தார்.