தமிழ்நாடு (Tamil Nadu)

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் கொலையில் உறவினர்களுக்கு தொடர்பா?

Published On 2024-05-14 06:09 GMT   |   Update On 2024-05-14 06:15 GMT
  • உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடைக்கு சென்று ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய வீடியோவும் வெளியாகி இருந்தது.
  • ஜெயக்குமாரை கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள்.

நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் கடந்த 10 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.கண்ணன் மேற்பார்வையில் நெல்லை சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படையினர் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் இதுவரை நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 32 பேர் முக்கிய பிரமுகர்கள் ஆவர்.

கடந்த 2-ந்தேதி அன்று ஜெயக்குமார் மாயமான நிலையில் மறுநாள் 3-ந்தேதி புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுநாளே ஜெயக்குமார் வீட்டு அருகே உள்ள தனது தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கம்பிகளால் சுற்றப்பட்டிருந்த நிலையில் பெரிய கடப்பா கல்லும் கட்டப்பட்டிருந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடந்த 10 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.

உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடைக்கு சென்று ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய வீடியோவும் வெளியாகி இருந்தது. அந்த டார்ச் லைட்டும் ஜெயக்குமார் எரிந்த நிலையில் கிடந்த இடத்தில் இருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டது. தோட்டத்து கிணற்றில் இருந்து கத்தி ஒன்றும் கிடைத்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இப்படி ஜெயக்குமார் கொலை தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அடுத்தக்கட்ட விசாரணைக்கு தயாராகி வருகிறார்கள்.

ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், சந்தேக மர்மமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் ஜெயக்குமாரை கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள். தற்கொலை செய்து கொள்ளப்போகும் ஒருவர் பெரிய கடப்பா கல்லை உடலில் கட்டிக் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை.

அதே நேரத்தில் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சில்வர் நிறத்திலான கையடக்க பிரசை வாயில் திணித்துக் கொள்ளவும் வாய்ப்பு இல்லை. எனவே ஜெயக்குமாரை யாரோ திட்டமிட்டு கொலை செய்து எரித்துக் கொன்று இருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது. ஜெயக்குமார் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சில பொருட்கள் அவரது வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஜெயக்குமாரின் உறவினர்கள் சிலரே அவரை தீர்த்துக் கட்டி இருக்கலாமோ? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புதிய கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக அவரது கடிதங்களையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கடிதங்கள் உயிரிழப்பதற்கு முன்பு அவரால் எழுதப்பட்டவைதானா? என்பதை கண்டறிவதற்காக தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகே ஜெயக்குமார் எழுதிய கடிதத்தின் உண்மை தன்மை பற்றிய விவரங்கள் தெரியவரும்.

ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாருக்கு கிடைத்து உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயக்குமாருக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் எல்லை மீறி போய் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இதில் ஜெயக்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது உறவினர்களே திட்டம் போட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகமும் வலுத்து உள்ளது. இப்படி ஜெயக்குமாரின் மரணத்தில் இறுதிக் கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கலாமா? என்கிற கோணத்திலும் போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உயிரிழப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தனது சொத்துக்கள் தொடர்பாக ஜெயக்குமார் உயில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவர் எழுதியுள்ள மற்ற கடிதங்களில் தனக்கு பணம் தர வேண்டியவர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். எந்த இடத்திலும் அவர் யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்கிற தகவலை குறிப்பிடவில்லை. இதன்மூலம் தனது மரணத்துக்கு பிறகு தனக்கு பணம் தர வேண்டியவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற எண்ணத்துடன் ஜெயக்குமார் செயல்பட்டிருப்பதும் அம்பலமாகி உள்ளது.

இதன்மூலம் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இருப்பினும் ஜெயக்குமார் மரணத்தில் நீடிக்கும் மர்மம் ஒரு வாரத்தில் விலகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஜி.கண்ணன் இதனை தெரிவித்துள்ள நிலையில் 10 தனிப்படை போலீசாரும் குற்றவாளிகளை நெருங்கி உள்ள போலீசார் அவர்களை பிடிக்க பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

Tags:    

Similar News