முசிறியில் இன்று இரட்டைக்கொலை- தொழிலாளி வெறிச்செயல்
- பாலச்சந்திரன் அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார்.
- கொலை நடந்த பகுதியில் பாதுகப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி அந்தரப்பட்டி குடோன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கீதா(வயது46). முருகேசன் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். கீதா கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வசித்து வந்தார்.
இந்த நிலையில் கீதாவுக்கும் முசிறியை அடுத்த வாழவந்தியை சேர்ந்த பாலசந்திரன்(64) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பாலச்சந்திரன் அடிக்கடி கீதாவை சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை பாலச்சந்திரன் வழக்கம்போல கீதாவின் வீட்டுக்கு வந்தார். அங்கு கீதாமட்டும் தனியாக இருந்தார். அப்போது கீதாவுக்கும், பாலசந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பாலச்சந்திரன் அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கீதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து ஆவேசமாக பாலச்சந்திரன் வாழ்வந்திக்கு சென்றார்.
அங்கு தனது வீட்டு அருகே வசித்த ரமேஷ்(55) என்பவர் அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இவர் வாழவந்தி தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். திடீரென ரமேசையும் பாலச்சந்திரன் அரிவாளால் வெட்டினார்.
தலை மற்றும் கைகால்காளில் வெட்டுக்காயம் அடைந்த ரமேஷ் உயிருக்கு போராடிக் கண்டிருந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அடுத்தடுத்த கொலைகளால் அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. கொலையாளி பலச்சந்திரன் ஜம்பு நாதபுரம் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சென்று போலீசாரிடம் நடந்த விவரத்தை கூறி சரண் அடைந்தார்.
இதை தொடர்ந்து பாலச்சந்திரனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவத்துக்கும் ரமேஷ் கொலைக்கும் வேறு வேறு காரணங்கள் இருப்பதாக போலீசாரிடம் பாலச்சந்திரன் கூறியுள்ளார். எனினும் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் கொலை செய்யப்பட்ட ரமேசுக்கும் பாலசந்திரனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக அவரை பாலசந்திரன் கொலை செய்ததாக தெரிகிறது. கள்ளக்காதலி கீதாவை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முசிறி பகுதியில் இன்று அதிகாலை நடந்த இந்த இரட்டைக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த பகுதியில் பாதுகப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.