தமிழ்நாடு

ஒரே நாளில் ரூ.30 உயர்வு: தக்காளி கிலோ ரூ.200-யை எட்டும் அபாயம்

Published On 2023-07-27 07:24 GMT   |   Update On 2023-07-27 07:24 GMT
  • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகளில் சுமார் 600 டன் வரை தக்காளி தினசரி விற்பனைக்கு குவிந்து வருவது வழக்கம்.
  • பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலையும் வரத்து குறைவால் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

போரூர்:

தமிழகத்தில் தக்காளி விலை தாறுமாறாக அதிகரித்து ரூ.130 வரை விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக சற்று குறைய தொடங்கியது. கிலோ ரூ.100-க்கு கீழ் இறங்கியதால் வரும் நாட்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த வாரத்தை விட மேலும் குறைய தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக தக்காளி விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்றைவிட கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரித்து இருக்கிறது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.110 வரை விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.140 வரை விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகளில் சுமார் 600 டன் வரை தக்காளி தினசரி விற்பனைக்கு குவிந்து வருவது வழக்கம். ஆனால் இன்று 30 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நடந்து வரும் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட வடமாநில வியாபாரிகளும் தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து விலையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இனி வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.200 வரை விற்க வாய்ப்பு உள்ளது.

இதேபோல் பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலையும் வரத்து குறைவால் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.80-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.280-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் இதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News