மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தம்: 16-ந்தேதி பஸ்கள் ஓடுமா?
- போராட்டம் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் மறியல், முழு அடைப்பு உள்ளிட்ட பல வடிவங்களில் நடைபெற உள்ளது.
- போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள், வினியோகிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
சென்னை:
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகப்படுத்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
வருகிற 16-ந்தேதி நடைபெறும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள், தபால் தொலை தொடர்புதுறை, ரெயில்வே, மின்வாரியம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள தொழிற்சங்கத்தினர் பங்கெடுக்க உள்ளனர்.
இந்த போராட்டம் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் மறியல், முழு அடைப்பு உள்ளிட்ட பல வடிவங்களில் நடைபெற உள்ளது. போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள், வினியோகிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கு பெற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதற்கான ஆலோசனைக்கூட்டம் சென்னை தொ.மு.ச. தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., டி.டி.எஸ்.எப். உள்பட 9 சங்கங்கள் சார்பில் அதன் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.
இதில் மத்திய அரசை கண்டித்து அகில இந்திய அளவில் பிப்ரவரி 16-ந் தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தையும், மறியல் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி சி.ஐ.டி.யு. தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன் கூறுகையில், "மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முழுமையாக பங்கேற்க உள்ளது.
இதனால் 16-ந்தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்போது பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும்.
அன்றைய தினம் தொழிலாளர்கள் 'ஸ்டிரைக்கில்' பங்கேற்கும்போது அதே நாளில் மறியல் போராட்டங்களும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதால் பஸ்கள் ஓடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "அத்தியாவசிய சேவை பணியில் போக்குவரத்து வருவதால் பஸ்களை இயக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றார்.
ஆனால் நடைமுறையில் அன்றைய தினம் பாதியளவு பஸ்கள் தான் ஓடும் என தெரிகிறது.