குவைத் தீ விபத்தில் திருச்சி டிரைவர் பலி: மனைவி கதறல்
- பிணமாக திரும்பும் நிலை ஆகிவிட்டதே என கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதக இருந்தது.
- குவைத் தீ விபத்தில் நவல்பட்டு டிரைவர் பலியானது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி:
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்கள் உடல் கருகி பலியாகினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியானவர்களின் உடல்கள் விமான மூலம் சொந்த ஊருக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜு எபினேசர் (வயது 54) என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். இவர் அங்குள்ள பெட்ரோலியம் மற்றும் ஆயில் நிறுவனமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் ட்ரெய்லர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
இவர் அந்த நிறுவனம் வழங்கிய தங்குமிட தொழிலாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபோது தீ விபத்தில் சிக்கியுள்ளார். அவர் இறந்ததாகவும், அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் வந்த முரண்பட்ட தகவல்களால் அவரது குடும்பத்தினர் தவித்தனர்.
தனது தந்தையின் நிலை அறிய வேண்டி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை அவரது மகன் குணசீலன் ஒரு கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் கூறும் போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலமாக தந்தையிடம் பேசினேன். பின்னர் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்து. அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.
ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் அரசு கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை ஆனால் இதுவரை அவருடைய நிலையை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. இதற்கிடையே அப்பா பணியாற்றி வந்த தனியார் நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது என்னுடைய தந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் தூதரக அதிகாரி இதை உறுதி செய்யவில்லை என தெரிவித்தார்.
இதற்கிடையே கலெக்டரிடம் மனு அளித்து சென்ற பின்னர் நேற்று இரவு சென்னையில் இருந்து தமிழக அரசின் அயலக தமிழர்கள் நல வாழ்வு துறை அதிகாரி ஒருவர் குணசீலனை தொடர்பு கொண்டு அவரது தந்தை எபினேசர் உயிரிழந்ததை உறுதி செய்தார்.
அப்போது தந்தையின் உடலை விமான மூலம் கொச்சிக்கு கொண்டு வந்து பின்னர் திருச்சிக்கு கொண்டு வருவதாகவும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து தரும் எனவும் கூறியுள்ளார். இதை கேட்டு ராஜூ எபினேசரின் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.
எபினேசரின் மனைவி ராஜேஸ்வரி கூறும்போது, கடந்த 11-ந் தேதி மாலை கணவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். விசா முடிவதால் அடுத்த மாதம் ஊருக்கு வருவதாக கூறியிருந்தார். அவர் பிணமாக திரும்பும் நிலை ஆகிவிட்டதே என கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதக இருந்தது.
குவைத் தீ விபத்தில் நவல்பட்டு டிரைவர் பலியானது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.