'தாமரையை வீழ்த்த வேண்டும்': அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்தில் வாக்கு கேட்ட டிடிவி தினகரன்
- அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்
- குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை - டிடிவி தினகரன்
கோவை மாவட்டம் சூலூரில் பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வாக்கு சேகரிக்க, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் தாமரை சின்னம் என கூச்சலிட்டனர்.
அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், நேற்று நான் போட்டியிடும் தேனி தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். அதே நியாபகத்தில் குக்கர் சின்னம் என கூறிவிட்டேன் என்று விளக்கம் அளித்தார்.
குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர் பின்பு அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
மோடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய அண்ணாமலையை வெற்றி செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல தீய சக்தியையும் துரோக சக்தியையும் "தாமரையை வீழ்த்த" நீங்கள் துணை புரிய வேண்டும் அவர் பேசினார்.
அதன் பின்னர் சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன், தாமரை வெற்றி பெற்றது என்ற செய்தி தமிழகம் முழுவதும் பறை சாற்ற வேண்டும் என பேசி சமாளித்தார்.