ஓட்டு கேட்டு அரசியல்வாதிகள் யாரும் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது- உப்பாறு அணை விவசாயிகள் அறிவிப்பால் பரபரப்பு
- 35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்து உப்பாறு அணை உள்ளது. இந்த அணையை நம்பி 6500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கூறி கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயத்திற்கு கூட தண்ணீர் வேண்டாம். குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படாததை கண்டித்து அணை பகுதியை சேர்ந்த விவசாய கிராமங்களான கெத்தல் ரேவ், தாசம்பட்டி, பொன்னாளிபாளையம், வண்ணாம்பட்டி, தேர் பாதை, தொண்டாமுத்தூர், ரங்கம் பாளையம், நடுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அரசியல்வாதிகள் யாரும் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.