தமிழ்நாடு

தே.மு.தி.க. அலுவலகத்தில் நாளை தொண்டர்களோடு 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விஜயகாந்த்

Published On 2023-08-24 05:20 GMT   |   Update On 2023-08-24 05:20 GMT
  • வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
  • என்னுடைய உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்.

சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாளை 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன் தொண்டர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்படுகின்றன.

பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

2005-ம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகிறேன். தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார்கள்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளில் சுமார் 100 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவுடன் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிள் வாகனங்களையும், தமிழகம் முழுவதும் வறுமை நிலையில் உள்ள சுமார் ஆயிரம் நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் வீதம் சுமார் ஒரு கோடி ரூபாயும், செம்மரக்கட்டை வெட்டியதாக ஆந்திரா வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாயும், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை "மக்களுக்காக மக்கள் பணி" என்ற திட்டத்தின் மூலம் ஏற்கனவே 2012-ம் ஆண்டில் செய்ததைப்போல தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நல உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி உள்ளோம். மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவது போல், மதிய உணவு மற்றும் நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் இந்த ஆண்டும் வழங்கப்படும்.

இதுபோன்று நமது கழக கொடியை அனைத்து இடங்களிலும் ஏற்றி நலத்திட்டங்களை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்புதினத்தில் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம் பிடித்துள்ளோம். என் மீது அன்புகொண்ட தமிழக மக்களுக்கும், தாய்மார்களுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் நல் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் 25.8.2023 (நாளை) காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன். என்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News