விக்கிரவாண்டி- அ.தி.மு.க.வினரின் ஓட்டு யாருக்கு? ஆதரவை பெற பாமக, நாம் தமிழர் கட்சியினர் தீவிரம்
- தி.மு.க.வுக்கு பா.ம.க. கடும் போட்டியை ஏற்படுத்தி இருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
- நாம் தமிழர் கட்சியும் அ.தி.மு.க. வினரின் ஓட்டுகளை பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10 -ந்தேதி நடைபெறுவதையொட்டி அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள நிலையில் அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது.
இதைதொடர்ந்து அ.தி.மு.க.வினரின் ஓட்டு யாருக்கு? என்கிற எதிர் பார்ப்பு தேர்தல் களத்தில் அதிகரித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க.வினர் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பிலேயே ஈடுபடுவார்கள், இரட்டை இலையை தவிர வேறு எந்த சின்னத்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்று அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் உள்ளூர் அ.தி.மு.க.வினர் இடைத்தேர்தலில் ஓட்டு போடுவதற்கு தயாராகி வருவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே அவர்கள் யாருக்கு ஓட்டு போடப்போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு தொகுதி முழுவதும் மட்டுமின்றி அரசியல் களத்திலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி 93,730 வாக்குகளும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 84,157 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். 9,573 வாக்குகள் வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருந்தது.
முன்னதாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 1 லட்சத்து 13,766 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அப்போது தி.மு.க.வுக்கு 62,842 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. 2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில் அ.தி.மு.க. 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்துள்ளது. இப்படி விக்கிரவாண்டி தொகுதியில் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களிலும் தி.மு.க.வுக்கு அ.தி.மு.க கடும் போட்டியை ஏற்படுத்தி வென்றும் காட்டியுள்ளது.
இதனால் அ.தி.மு.க. வினரின் ஓட்டுகள் பா.ம.க. வுக்கு கிடைத்தால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்பதே அக்கட்சியின் கணக்காக உள்ளது.
இதை தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அ.தி.மு.க.வினர் பா.ம.க.வுக்கு ஓட்டு போட வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார். பிரசார பேனர்களிலும் ஜெயலலிதாவின் படத்தை போட்டு பா.ம.க. வினர் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.
அக்கட்சி வேட்பாளரான சி.அன்புமணி மாநில வன்னியர் சங்க துணை தலைவராக இருந்து வருகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் 2016-ம் ஆண்டு பா.ம.க. தனித்து போட்டியிட்ட போது இவர் 41,428 ஓட்டுகளை பெற்றிருக்கிறார். வன்னியர் சமூகத்தினர் அதிக அளவில் உள்ள இந்த தொகுதி பா.ம.க.வுக்கு சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படும் நிலையில் அ.தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் பா.ம.க. வேட்பாளருக்கே ஓட்டு போட தயாராகி வருவதாகவே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணி வன்னியர் சங்கத்தில் செயல்பட்டு வருவதால் கட்சி பேதங்களை தாண்டி அவருக்கு அ.தி.மு.க.வினர் நிச்சயம் ஓட்டு போடுவார்கள் என்றே கூறப்படுகிறது. இதன் மூலம் விக்கிரவாண்டியில் தி.மு.க.வுக்கு பா.ம.க. கடும் போட்டியை ஏற்படுத்தி இருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. ஏற்கனவே இடம் பெற்று தேர்தலை சந்தித்திருப்பதால் அந்த பாசத்தில் அ.தி.மு.க.வில் உள்ள 4 பேரில் 2 பேர் நிச்சயம் பா.ம.க.வுக்கு ஓட்டு போடுவார்கள் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இப்படி போட்டி கடுமையாகி இருப்பதாலேயே விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெறும் முனைப்புடன் தி.மு.க. அமைச்சர்கள் அங்கு பம்பரமாக சுழன்று பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி அ.தி.மு.க.வினரின் ஓட்டை பெறுவதற்கு பா.ம.க. முழு அளவில் காய் நகர்த்தி உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியும் அ.தி.மு.க. வினரின் ஓட்டுகளை பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
சென்னையில் நடந்த அ.தி.மு.க. உண்ணா விரத போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் நிர்வாகி ஒருவர் நேரில் சென்று ஆதரவு அளித்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி நன்றியும் தெரிவித்துக் கொண்டார். இதனால் அ.தி.மு.க.வினரில் சிலர் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது.
எப்போதுமே இடைத்தேர்தல் களத்தில் ஆளும் கட்சிக்கு வெற்றி என்கிற நிலையே காணப்படும். இதனால் மற்ற எந்த விஷயங்களும் அங்கு பேசு பொருளாக இருக்காது. ஆனால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதற்கு மாறாக அ.தி.மு.க. வினரின் ஓட்டு யாருக்கு? என்பதே பிரதான பேச்சாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.