ரூ.8 லட்சம் நிதி திரட்டி 2 கி.மீ. தூரம் பாசன வாய்க்காலை தூர்வாரிய கிராம மக்கள்
- பாசன வாய்க்காலின் இரு கரைகளையும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.
- இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, பாசன வாய்க்கால் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராகநல்லூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் முறையான பராமரிப்பின்றி கடந்த 30 ஆண்டுகளாக ஏரி மற்றும் பாசன வாய்க்கால் தூர்ந்து போய் காணப்பட்டது.
மேலும் பாசன வாய்க்காலின் இரு கரைகளையும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதனால் பருவமழை காலங்களில் தொடர் கனமழை பெய்தால் கூட பாசன வாய்க்கால் வழியாக ஏரிக்கு முறையாக தண்ணீர் வரத்து இன்றி முழு கொள்ளளவை எட்டாமலேயே இருந்தது. இதனால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகமும் பாசன வாய்க்காலை தூர்வார போதிய நிதி இல்லை என கைவிரித்து விட்டதாக தெரிகிறது. இதனால் கிராம மக்கள், தூர்ந்து போன பாசன வாய்க்காலை மீட்டெடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஆதிவராகநல்லூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுமார் ரூ.8 லட்சம் நிதி திரட்டினர்.
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆதிவராகநல்லூர் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்காலை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூர்வார தொடங்கினர். இதில் தற்போது சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன வாய்க்காலை தூர்வாரி, இருகரைகளிலும் மண் கொட்டி பலப்படுத்தி உள்ளனர். மேலும் இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, பாசன வாய்க்கால் அகலப்படுத்தப்பட்டுள்ளது. கிராம மக்களே ஒன்று சேர்ந்து நிதிதிரட்டி பாசன வாய்க்காலை தூர்வாரியதை அறிந்த சுற்று வட்டார பகுதி மக்கள் ஆதிவராகநல்லூர் கிராம மக்களை பாராட்டினர்.