தமிழ்நாடு

குலதெய்வ கோவிலுக்கு வரும் விஜயகாந்த்தை கண்கண்ட கடவுளாக பார்த்த கிராம மக்கள்

Published On 2023-12-29 04:35 GMT   |   Update On 2023-12-29 04:35 GMT
  • கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.
  • விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த காங்கேயநத்தம் கிராமத்தில் ரெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 4 தலைமுறைகளாக பலருக்கு குல தெய்வ கோவிலாக இருந்து வருவது வீரம்மாள் கோவில். அந்த வகையில் விஜயகாந்த் தனது தந்தை வழியில் வீரம்மாள் கோவிலுக்கு வரத்தவறியதில்லை.

இந்த கோவில் திருப்பணிகளுக்காக ஏராளமான நன்கொடைகளை வாரி வழங்கிய வள்ளலாக திகழ்ந்த விஜயகாந்த், தன்னால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையிலும் தனது மனைவி, மகன்களை அனுப்பி வைத்து உதவிகள் செய்து வந்துள்ளார். கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.

சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதனை தொடங்கும் முன்பு வீரம்மாள் கோவிலுக்கு விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்திருந்து பூஜைகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று மனைவி, மகன்களுடன் வந்து இரவில் கோவிலில் தங்கி படையலிட்டு, 6 கால பூஜையிலும் பங்கேற்று வழிபாடு நடத்தியுள்ளார்.

பின்னர் கோவிலில் இருந்து புறப்படும் முன்பாக அங்கு வரும் பங்காளி முறை கொண்ட அனைவரையும் அழைத்து நலம் விசாரிப்பதோடு, அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளின் கல்வி குறித்தும் கேட்டறிந்து மன நிறைவு பெறுவார்.

அதிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் கஷ்டப்படுவர்களிடம் அவர்களின் தேவை குறித்து கேட்டறிந்து உதவிகள் பல செய்துள்ளார். இருந்தபோதிலும் அதனை வெட்ட வெளிச்சமாக காண்பித்ததில்லை. நீங்கள் நன்றாக இருந்தால்தான் உங்களின் குழந்தைகளின், அவர்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்பதில் எப்போதும் நம்பிக்கை கொண்டவன் என்பதில் உறுதியாக இருந்த கேப்டன் விஜயகாந்த், பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

தலைமுறைகள் பல கடந்தாலும், குலதெய்வ கோவிலுக்கும், அங்கு வரும் பலரது குடும்பத்தாருக்கும் யாரும் அறியா வண்ணம் உதவிகள் செய்துவந்துள்ள விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.

காங்கேயநத்தம் கிராமத்தில் வீரம்மாள் கோவில் பலருக்கு குலதெய்வமாக இருந்தபோதிலும், கண்கண்ட தெய்வமாக விஜயகாந்த் இருந்துள்ளார் என்பது வெளியில் தெரியாத உண்மை.

Tags:    

Similar News