தமிழ்நாடு (Tamil Nadu)

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல்

Published On 2024-06-10 08:34 GMT   |   Update On 2024-06-10 08:34 GMT
  • தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • விக்கிரவாண்டி தேர்தலில் மீண்டும் 4 முனை போட்டி ஏற்படும் என தெரிகிறது.

சென்னை:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்தார்.

இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

அந்த சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் நடந்தது. அடுத்த 6 கட்ட தேர்தல் பல்வேறு கட்டங்களாக மற்ற மாநிலங்களில் நடந்தது. இதனால் 7-வது கட்டமாக இறுதி கட்ட தேர்தலின்போது விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.


இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10- ந் தேதி (அடுத்த மாதம்) நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஜூன் 14-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஜூன் 21-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அட்டவணை வெளியிட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி 26-ந் தேதி (புதன்கிழமை) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 10-ந் தேதி வாக்குப்பதிவு என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ந் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூலை 15-ந் தேதி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்த முறை மீண்டும் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2021 தேர்தலின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி 93,730 ஓட்டுகள் வாங்கி இருந்தார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் நின்ற முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகள் பெற்றார். 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் அய்யனார் 3,053 வாக்குகளும் பெற்றிருந்தனர்.


அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா இணைந்திருந்தது. ஆனால் இப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. இனி வரும் தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பா.ம.க. நீடித்து தேர்தலை சந்தித்தது.

இந்த கூட்டணி விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. போட்டியிடுவது தற்போது உறுதியாகி உள்ளது. இதில் தி.மு.க. நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று அறிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். எனவே பா.ம.க.வும் இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்க உள்ளது. எனவே விக்கிரவாண்டி தேர்தலில் மீண்டும் 4 முனை போட்டி ஏற்படும் என தெரிகிறது.

விக்கிரவாண்டி தேர்தலோடு சேர்த்து 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது.

மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிக்கும், இமாச்சலப்பிரதேசம்-3, உத்தரகாண்ட்-2, பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தலா 1 இடங்களிலும் தேர்தல் நடக்கிறது.

Tags:    

Similar News