தமிழ்நாடு

நரேந்திரன் முதல் நரேந்திர மோடி வரை: விவேகானந்தர் பாறையின் சிறப்புகள்

Published On 2024-05-30 06:40 GMT   |   Update On 2024-05-30 06:40 GMT
  • இன்று காலையில் விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
  • காலை 10.45 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி:

பிரதமர் மோடி இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார். அங்கு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு தனிப்படகில் செல்கிறார். அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து அவர் தியானம் செய்கிறார். வரும் 1-ம் தேதி மாலை வரை 3 நாட்கள் தரையில் அமர்ந்து பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுகிறார். இதற்காக அங்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு நேற்று முதலே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலையிலும் விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் முகவரிகளை குறித்துவிட்டு போலீசார் அனுப்பி வைத்தனர். காலை 10.45 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து ஏற்கனவே சென்ற சுற்றுலா பயணிகள் அனைவரும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி படகு தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விவேகானந்தர் மண்டபம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடலின் நடுவே பாறையில் 3 நாட்கள் தவம் இருந்த சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் பயணம் செய்தபோது 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி வந்தார். அவர் குமரிக்கடலின் நடுவே இருந்த ஸ்ரீபாத பாறையில் தவம் செய்யவேண்டும் என விரும்பினார். இதற்காக அவர் அங்கிருந்த மீன்பிடி படகோட்டியிடம் அங்குள்ள பாறையில் இறக்கிவிட முடியுமா? என்று கேட்டார். அதற்கு பணம் கொடுத்தால் படகில் ஏற்றி பாறையின் அருகில் கொண்டு விடுகிறேன் என்று படகோட்டி கூறியுள்ளார்.

பணம் இல்லாததால் கடலுக்குள் அப்படியே குதித்த சுவாமி விவேகானந்தர் அலைகளுக்கு இடையே நீந்திச்சென்று அந்த பாறையில் அமர்ந்து தவம் செய்தார். அதாவது டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 3 நாட்கள் தவம் இருந்தார். அப்படி சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில்தான் தற்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. கடற்கரையில் இருந்து நேராக 1,350 அடி தூரத்தில் இந்தப் பாறை அமைந்துள்ளது.

இந்த தியான மண்டபத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 1-ம் தேதி வரை 3 நாட்கள் தியானம் இருக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News