சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு பாதியாக குறைந்தது
- கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரியில் தண்ணீர் வீணாவதை தடுக்க அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 797 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி அனைத்து குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 8 ஆயிரத்து 627 மி.கனஅடி (8.6 டி.எம்.சி)தண்ணீர் உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் குடிநீர் ஏரிகளில் 9 ஆயிரத்து 717 மி.கனஅடி (9.7டி.எம்.சி) தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது ஒரு டி.எம்.சி. தண்ணீர் குறைவாகவே உள்ளது.
எனினும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு பெற வேண்டிய தண்ணீர் இன்னும் பெறவில்லை. எனவே வரும் மாதங்களில் கிருஷ்ண நதிநீர் பூண்டி ஏரிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு பாதியாக குறைந்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் தற்போது 452 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரியில் தண்ணீர் வீணாவதை தடுக்க அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சோழவரம் ஏரியில் இருந்து 546 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் தற்போது 2505 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 720 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்கு 189 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 2166 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 303 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3048 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்கு 137 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில் 456 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.