தமிழ்நாடு (Tamil Nadu)

திருமங்கலம் பகுதி பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு

Published On 2023-11-15 04:57 GMT   |   Update On 2023-11-15 04:57 GMT
  • தொடர் மழை காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
  • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உள்ளது. 1053 கன அடிநீர் வருகிறது.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

தொடர் மழை காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. 71 அடி உயரம் கொண்ட அணையில் 70 அடியில் நீர் மட்டம் நிலைநிறுத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10ந் தேதி அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக இருந்தபோது பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள முதல்போக பாசனத்திற்கு 900 கன அடி திறக்கப்பட்டது. இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 5041 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். பேரணை மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக திருமங்கலம் பிரதான கால்வாயில் ஒருபோக பாசன நிலங்களுக்கு இன்று முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 230 கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி இன்று முதல் பெரியாறு பாசன கால்வாயில் 900 கன அடி. திருமங்கலம் கால்வாயில் 230 கன அடி, மதுரை மாவட்ட குடிநீர் உள்பட 1899 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 597 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 70.28 அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உள்ளது. 1053 கன அடிநீர் வருகிறது. அணையில் இருந்து 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. வரத்து 147 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 78.47 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

பெரியாறு 4.2, தேக்கடி 1.8, உத்தமபாளையம் 1.2, போடி 0.2, வைகை 3.6, மஞ்சளாறு 2, பெரியகுளம் 5, வீரபாண்டி 3.2, அரண்மனைபுதூர் 2, ஆண்டிபட்டி 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News