மத்திய அரசின் கடன் சுமை ரூ.100 லட்சம் கோடியை அண்ணாமலை மறந்தது ஏன்?- கே.எஸ்.அழகிரி
- தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்று மிகுந்த அக்கறையோடும் ஆர்வத்தோடும் அவர் பணியாற்றி வருகிறார்.
- தொலைக்காட்சி ஊடகங்கள் மைக்கை நீட்டினால் விளம்பரத்திற்காக எத்தகைய அவதூறையும் பேசிவிடலாம் என்று அண்ணாமலை நினைத்தால் அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவிலேயே எத்தகைய உத்தியை கையாண்டாலும் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த முடியாத ஒரே மாநிலமாக மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் எக்கு கோட்டையாக தமிழகம் விளங்குகிறது.
இந்நிலையில் நடைபயணம் என்ற போர்வையில் உல்லாச பயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு கிற வகையில் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை கூறி வருகிறார். தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும் தமிழகத்தின் ஒட்டு மொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்றும் பேசியிருக்கிறார். தமது முதுகு தனக்கு தெரியாது என்பதால் இத்தகைய கருத்தை அவர் கூறியிருக்கிறார். இக்கருத்தை கூறுவதற்கு முன் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடன் நிலைமை என்ன என்பது குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும்.
தமிழகத்தின் கடனைப் பற்றி பேசுகிற அண்ணாமலை ஒன்றிய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால கடன் சுமை 100 லட்சம் கோடி அதிகரித்திருப்பதைப் பற்றி என்ன பதில் கூறப் போகிறார்? இதற்கான விளக்கத்தை தருவாரா? தொலைக்காட்சி ஊடகங்கள் மைக்கை நீட்டினால் விளம்பரத்திற்காக எத்தகைய அவதூறையும் பேசிவிடலாம் என்று அண்ணாமலை நினைத்தால் அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. அதற்குரிய விளக்கத்தை கூற தவறுவாரேயானால் மக்கள் மன்றத்தில் அவர் பதில் கூறியே ஆக வேண்டும்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த போது அன்றைய நிதி அமைச்சர் பொருளாதார நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்றைய கடன் சுமைக்கு தி.மு.க. அரசு பொறுப்பல்ல. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்ற வேண்டு மென்ற பொறுப்புணர்ச்சியுடன் அவர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்று மிகுந்த அக்கறையோடும் ஆர்வத்தோடும் அவர் பணியாற்றி வருகிறார்.
ஒன்றிய அரசுக்கு ரூபாய் 1 வரியாக வழங்கினால் 29 பைசா தான் திரும்பி வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். இதற்கு நேரிடையாக பதில் கூறாமல் நிர்மலா சீதாராமன் விதண்டாவாதங்களை பேசி வருகிறார். இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இயற்கை பேரிடரினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற தமிழக மக்களின் துயரத்தில் எந்த பங்கையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சக பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.