அன்புமணி ராமதாஸ் கைகட்டி மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி
- நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத்துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா?
- தைரியம் இருந்திருந்தால், அவர் சென்னையில் பேசுவதும்-போராடுவதும் உண்மையென்றால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளி நடப்பாவது செய்திருக்க வேண்டாமா?
சென்னை:
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை" என மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோசி மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார். அதுவும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கேட்ட கேள்விக்கு அவ்வாறு எழுத்துப்பூர்வமான பதிலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் "வீராவேசம்" செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத்துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா?
இங்கே "மண்ணையும், மக்களையும் காப்போம்" என்றவர் டெல்லியில் முகத்திற்கு நேராக, "என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடமாட்டோம்" என்று மத்திய பா.ஜ.க. மந்திரி, அதுவும் அன்புமணி ராமதாசே விரும்பி இடம்பெற்றுள்ள "டெல்லி தேசிய ஜனநாயகக் கூட்டணியின்" மந்திரி அறிவித்த பிறகும், ஏன் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் தெரிவித்த பிறகும், பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்?
தைரியம் இருந்திருந்தால், அவர் சென்னையில் பேசுவதும்-போராடுவதும் உண்மையென்றால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளி நடப்பாவது செய்திருக்க வேண்டாமா? அதிகபட்சமாக "இனி நாங்கள் டெல்லி அளவில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இல்லை" என்று அறிவித்து விட்டு விமானம் ஏறிச் சென்னைக்கு வந்திருக்க வேண்டாமா?
வட மாவட்ட மக்களின் நலனுக்கும், உழவர்களின் உரிமைகளுக்காகவும் எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓயாது உழைக்கிறார். மத்திய அரசுடன் போராடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இன்னும் மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த மண்ணையும், மக்களையும் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என்று நம்பியிருக்கும் உழவர்களை, வட மாவட்ட மக்களை-உங்களின் இது போன்ற "கபட நாடகங்கள்" மூலம் திசைதிருப்பி விட முடியாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.