தமிழ்நாடு

தேயிலை எஸ்டேட்டில் கூட்டமாக திரியும் காட்டு யானைகள்: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

Published On 2023-11-18 04:28 GMT   |   Update On 2023-11-18 04:28 GMT
  • இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உலா வருகின்றன.
  • பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம்.

வால்பாறை:

கேரளா மாநிலத்தில் இருந்து ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வால்பாறை வனப்பகுதிக்கு திரண்டு வருவது வழக்கம்.

இங்கு அவை 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும். மேலும் கேரளாவில் இருந்து காட்டு யானைகளின் இடப்பெயர்வு தொடர்ந்து 3 மாதம்வரை நீடிக்கும்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வால்பாறைக்கு வந்தபடி உள்ளன. அவை தற்போது கேரள மாநில வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள சின்கோனா, மூடிஸ், நல்லமுடி, ஷேக்கல்முடி எஸ்டேட்டுகள் வழியாக வால்பாறைக்கு வந்து கொண்டு உள்ளன.

இதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து உள்ள 20 காட்டு யானைகள் தற்போது வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. அவை இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உலா வருகின்றன. மேலும் அங்குள்ள விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன.

வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக முகாமிட்டு நிற்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம், அப்படியே வெளியில் செல்வதாக இருந்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News