மெரினா கடற்கரை பகுதியில் பெண்ணை கத்தியால் குத்தி நகை-பணத்தை பறித்த கும்பல்
- பயந்து நடுங்கிய சாந்தியிடம் கொள்ளையர்கள் நகை-பணத்தை தருமாறு கேட்டனர்.
- சந்தோசும் அவனது கூட்டாளிகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளனர்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையையொட்டிய சர்வீஸ் சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் வாலிபர்கள் சுற்றி வந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மெரினாவில் தூங்குபவர்களிடம் பணம் பறிப்பது, காதல் ஜோடியை மிரட்டி செல்போன்களை பறித்துச் செல்வது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மெரினா கடற்கரையை பகுதியில் நேற்று நள்ளிரவு பரபரப்பான கொள்ளை சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாந்தோம் சர்ச்சுக்கு பின்புறம் உள்ள கடற்கரை பகுதியையொட்டி உள்ளது லூப் ரோடு. இந்த சாலையில் நேற்று இரவு சாந்தி என்ற வயதான பெண் ஆட்டோவில் பயணம் செய்தார். நள்ளிரவு 1.30 மணி அளவில் இவர் சென்று கொண்டிருந்தபோது மழை பெய்தது.
இதனால் ஆட்டோவை சாலையோரமாக டிரைவர் நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் மழை பெய்வதால் சிறிது நேரம் ஆட்டோவில் ஒதுங்கிவிட்டு செல்கிறோம் என்று கூறினர். இதற்கு ஆட்டோ டிரைவரும் மூதாட்டி சாந்தியும் சம்மதித்தனர்.
இதையடுத்து ஆட்டோவில் ஏறி அமர்ந்த 4 பேரும் திடீரென கத்தியை காட்டி மிரட்ட தொடங்கினார்கள்.
முதலில் ஆட்டோ டிரைவரிடம் சென்று "பேசாமல் இங்கிருந்து ஓடி விடு... சத்தம் போட்டால் நீ காலி" என்று எச்சரித்தனர். இதனால் பயந்துபோன ஆட்டோ டிரைவர் எதுவும் செய்யாமல் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதைதொடர்ந்து பயந்து நடுங்கிய சாந்தியிடம் கொள்ளையர்கள் நகை-பணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் அவர் தரமறுத்து கூச்சல் போட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளை கும்பல் சாந்தியின் முகத்தில் ஓங்கி கத்தியால் குத்தியது. பின்னர் கழுத்து பகுதியிலும் கொள்ளையர்கள் கீறல் போட்டனர். இதனால் நிலைகுலைந்த சாந்தி உயிர் பயத்தில் நடுங்கினார். அப்போது தங்க கம்மல், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளை கும்பல் பறித்தது.
பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதை தொடர்ந்து சாந்தி, திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் கொள்ளையர்களை விரட்டினர்.
கொள்ளையர்களில் 3 பேர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஆனால் ஒருவன் மட்டும் மோட்டார் சைக்கிளில் ஏற முடியாமல் தவித்தான். அவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க கடலில் குதித்தான்.
ஆனால் காவலர்கள் விடாமல் விரட்டிச் சென்று கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் கடலில் இருந்து குண்டுகட்டாக கையையும், காலையும் பிடித்து கரைக்கு தூக்கி வந்தனர்.
கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பிடிபட்ட கொள்ளையனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவனது பெயர் சந்தோஷ் என்பது தெரியவந்தது. அயனாவரம் பகுதியை சேர்ந்த இவன்மீது கொலை முயற்சி வழக்கு ஒன்றும் உள்ளது. இந்த வழக்கில் சிறை சென்ற இவன் சமீபத்தில்தான் வெளியில் வந்துள்ளான்.
இந்த நிலையில்தான் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டு உள்ளான். தப்பி ஓடிய இவனது கூட்டாளிகள் யார்-யார்? என்பது பற்றி சந்தோஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் தலைமறைவான கொள்ளையர்கள் 3 பேரும் யார்-யார்? என்பது தெரிய வந்தது. அவர்களை அடையாளம் கண்டுள்ள போலீசார் கைது செய்ய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சந்தோசும் அவனது கூட்டாளிகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளனர்.
அப்போதுதான் சாந்தோம் லூப்ரோடு பகுதியில் ஆட்டோவில் பெண் ஒருவர் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து அருகில் சென்று பேச்சு கொடுத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசில் சிக்கியுள்ள கொள்ளையர்கள் சந்தோஷ், சூர்யா இருவரையும் விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் மெரினா பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.