அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை: 1 வருடத்திற்கும் மேல் கோமாவில் இருக்கும் பெண்
- 2 மாத மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஜெயந்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலச்சந்தர் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தெள்ளுர் கிராமத்தை சேர்ந்த சின்னராஜ்-குமாரி தம்பதியரின் மகள் ஜெயந்தி. இவருக்கும் ராம்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயந்தியை பிரசவத்துக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி சேர்த்தனர். அங்கு ஜெயந்தியை டாக்டர்கள் பரிசோதித்து வயிற்றில் குழந்தை அசைவற்று இருப்பதாக கூறினர்.
ஆனால் வயிற்றில் அசைவு தெரிவதாக உறவினர்கள் கூறியதன்பேரில் டாக்டா்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் ஜெயந்திக்கு உடல்நலம் மோசமான நிலை ஏற்பட்டதால் அவரை உடனடியாக மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு ஜெயந்தியை பரிசோதித்த டாக்டர்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறினர். அங்கு 2 மாத மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஜெயந்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இங்கு அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். 13 மாதம் ஆகியும் கோமா நிலையிலேயே அவர் உள்ளதால் ஜெயந்தியின் உறவினர்கள், பெற்றோர்கள் சுகாதாரத்துறைக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலச்சந்தர் ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆரணி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் மருத்துவ குழுவினர் சம்பவத்தன்று இருந்த டாக்டர்கள், நர்சுகள் மயக்கவியல் டாக்டர் உள்ளிட்டவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பான அறிக்கை சென்னை சுகாதாரத்துறைக்கு தெரிவித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குனர் கூறினார்.
இதுகுறித்துதகவல் அறிந்தவுடன் ஜெயந்தியின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பரபரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் வரவழைக்கப்பட்டனர்.