உயிரிழந்த மூதாட்டியின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்த பெண்கள்
- ஆண்கள் செய்யக்கூடிய எந்த பணிகளையும் பெண்களும் செய்யலாம் என்றனர்.
- மூதாட்டியின் உடலை மயானத்திற்கு பெண்களே தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டியை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணகுமார். இவரது பெரியம்மா இந்திராணி (வயது 83). இவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலுக்கு திராவிடர் கழகத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் அஞ்சலி செலுத்தியதோடு இறுதி சடங்குகளுக்காக மூதாட்டியின் உடலை மின் மயானத்திற்கு எடுத்து செல்வதற்காக தயாராகினர். இதையடுத்து திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் மூதாட்டி உடலை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மின் மயானத்தில் இருந்து மூதாட்டி உடலை ஆம்புலன்ஸ் வாகனத்திலிருந்து எரியூட்டும் மையம் வரை எடுத்துச்சென்று மின் மயானத்தில் உடலை வைத்து எரியூட்டினர். வழக்கமாக மின் மயானத்திற்கு ஆண்கள் மட்டுமே அதிக அளவில் சென்று இறந்தவர்களின் இறுதிச்சடங்கை செய்வார்கள். ஆனால் உயிரிழந்த மூதாட்டி உடலை வீட்டில் இருந்து மின் மயானம் வரை கொண்டு சென்றதுடன், இறுதி சடங்குகள் செய்து, மின்மயானத்தில் எரியூட்டும் வரை காத்திருந்து ஆண்கள் செய்யும் நடைமுறை வழக்கத்தை மாற்றி உள்ளனர்.
இது குறித்து திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நாங்கள் இந்த பணியில் ஈடுபட்டோம். ஆண்கள் செய்யக்கூடிய எந்த பணிகளையும் பெண்களும் செய்யலாம் என்றனர். உயிரிழந்த மூதாட்டியின் உடலை மயானத்திற்கு பெண்களே தூக்கி சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.