தமிழ்நாடு (Tamil Nadu)

மகளிர் உரிமைத்தொகை- 91.36 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்

Published On 2023-07-24 03:49 GMT   |   Update On 2023-07-24 05:40 GMT
  • விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் ரேசன் கடைக்கு சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
  • விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாத குடும்ப தலைவிகளுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள்.

சென்னை:

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி நடைமுறைக்கு வர உள்ளது.

இதற்காக 1 கோடி பெண்களுக்கு ரூ.1000 பணம் கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வீடு வீடாக கொடுக்கும் பணி கடந்த 20-ந் தேதி முதல் நடைபெற்று வந்தது.

ரேசன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள். இதில் கிராமப்புறங்களில் விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு எளிதில் வினியோகம் செய்து விட்டனர். ஆனால் சென்னை போன்ற பெரிய நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளதால் இங்கு விண்ணப்பங்களை வீடு வீடாக வழங்குவது என்பது ரேசன் கடை ஊழியர்களுக்கு பெரிய சவாலாக அமைந்து உள்ளது. இதனால் நேற்று இரவு விண்ணப்பம் கொடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது.

தமிழ்நாடு முழுவதும் 91.36 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதாகவும் அதாவது 80 சதவீதம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.

விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் ரேசன் கடைக்கு சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாம்கள் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஆகஸ்டு 4-ந் தேதி வரை இந்த முகாம்கள் நடைமுறையில் இருக்கும்.

இதன் பிறகு 2-ம் கட்டத்துக்கான விண்ணப்பம் தேவைப்பட்டால் வீடு வீடாக வினியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாத குடும்ப தலைவிகளுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள்.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத தகுதி படைத்த குடும்பத் தலைவிகள் நியாய விலைக்கடைகளுக்கு சென்று விண்ணப்பங்களை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News