தமிழ்நாடு (Tamil Nadu)

மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை- விண்ணப்பம், டோக்கன் வினியோகம் தொடங்கியது

Published On 2023-07-20 03:03 GMT   |   Update On 2023-07-20 06:50 GMT
  • ரேஷன் கார்டு உள்ள நியாய விலை கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டும்தான் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.
  • 21 வயது நிரம்பிய பெண்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை:

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என இதற்கு பெயரிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

ஒரு கோடி பெண்களுக்கு முதல் கட்டமாக இந்த உதவி தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மாதம் தோறும் ரூ.1000 பெண்களின் வங்கி கணக்கில் செலுத்த ரேஷன் கடைகள் மூலம் தகுதியானர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் தமிழகம் முழுவதும் இன்று முதல் வழங்கப்படுகிறது.

ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை கொடுத்து வருகின்றனர்.

சென்னையில் இத்திட்டம் 2 கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 98 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று விண்ணப்பப் படிவம் மற்றும் டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. மொத்தமுள்ள 1,428 ரேஷன் கடைகளில் 700 கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டன. இந்த பணி 3 நாட்கள் நடைபெறும். அதன் பின்னர் சிறப்பு முகாம்கள் மூலம் படிவங்கள் நிரப்பி பெறப்படுகின்றன.

ஒரு குடும்பத்திற்கு ஒரு விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. ஒருவருக்கு வழங்கிய படிவத்தை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. குடும்பத்தில் உள்ள ரேஷன் கார்டை காட்டிய பிறகு தான் படிவம் வழங்கப்படுகிறது. யாருக்கு படிவம் வழங்கப்பட்டது என்ற விவரத்தை ஊழியர்கள் பதிவேட்டில் எழுதினர். படிவத்துடன் டோக்கனும் வழங்கப்பட்டன. அதில் டோக்கன் எண் மற்றும் எந்த தேதியில் சிறப்பு முகாமுக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ரேஷன் கடை பகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு வீடு வீடாக சென்று வழங்கினார்கள். மகளிர் உரிமைத்தொகை படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுப்பதில் பெண்கள் ஆர்வமாக இருந்தனர். அடுத்தடுத்து வீடுகளுக்கு ஊழியர் செல்வதற்குள் ரேஷன் கார்டை முன்கூட்டியே கையில் எடுத்து வைத்து கொண்டனர்.

ஒரு சில இடங்களில் திருநங்கைகள் விண்ணப்ப படிவத்தை கேட்டனர். அவர்களுக்கு ஏற்கனவே உதவி தொகை கிடைப்பதால் இத்திட்டத்தில் சேர முடியாது என்பதை ஊழியர்கள் விளக்கி கூறினர்.

மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் பெற வேண்டும் என்பதில் இல்லத்தரசிகள் உற்சாகமாக உள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இருந்து உதவி தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பதில் தீவிரமாக இருந்தனர்.

படிவங்களை குடும்பத்தில் உள்ளவர்கள் பூர்த்தி செய்யலாம். அதனை செய்ய முடியாதவர்களுக்கு 24-ந் தேதி நடக்கும் சிறப்பு முகாம்களில் நிரப்புவதற்கு உதவி செய்யப்படும். ஆகஸ்ட் 4-ந் தேதி வரை நடைபெறும் முகாம்களின் மூலம் விண்ணப்பப் படிவங்கள் பெறப்படும்.

Tags:    

Similar News