தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி

Published On 2023-09-15 05:57 GMT   |   Update On 2023-09-15 05:57 GMT
  • தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றைய தினமே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வந்து சேர்ந்துள்ளது.
  • கலைஞர் மகளிர் உரிமை தொகை நெருக்கடியான நேரங்களில் உதவியாக இருக்கும்.

கரூர்:

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

அதன்படி 2023-24 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அந்த திட்டத்திற்கு ரூ. 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் சிறப்பு முகாம்கள் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின்னர் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தற்போது இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதா னத்தில் உரிமை தொகையை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றைய தினமே பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 வந்து சேர்ந்துள்ளது.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் பயனாளிகளின் வங்கி கணக்குக்கு நேற்றைய தினமே ரூ.1000 வந்துள்ளது.

கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி மகேஸ்வரி கூறும்போது;-

எனது கணவர் டீக்கடை மாஸ்டராக உள்ளார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாய் உள்ளத்துடன் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சின்ன சின்ன தேவைகளுக்கு கூட கணவரை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை இருந்தது. எனது சிறிய தேவைகளை கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை கொண்டு பூர்த்தி செய்வேன். முதலமைச்சருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூர் ஆத்தூர் பிரிவு பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி சுசீலா கூறுகையில், எனது கணவர் சலூன் கடை வைத்துள்ளார்.

நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். சொந்த வீடு கிடையாது. இரண்டு குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். சில நேரங்களில் வாடகை கொடுப்பதற்கும் பள்ளி செலவினங்களுக்கும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

இனிமேல் கலைஞர் மகளிர் உரிமை தொகை நெருக்கடியான நேரங்களில் உதவியாக இருக்கும். நேற்றைய தினமே எனது வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்து விட்டது. முதலமைச்சருக்கு என்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம்.

திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவி விஜயலட்சுமி கூறும்போது,

எனது கணவர் மரக்கடையில் மாதம் ரூ.10,000 சம்பளத்துக்கு வேலை செய்கிறார். வாடகை வீட்டில் இருக்கிறோம். மாத வாடகையாக ரூ. 3000 கொடுக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மகன் பத்தாம் வகுப்பு, இன்னொரு மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். நான் எந்த வேலைக்கும் செல்லாமல் குழந்தைகளை பராமரித்து வருகிறேன்.

சில நேரங்களில் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வாங்குவதற்கு கூட கையில் பணம் இருக்காது.

கலைஞர் உரிமைத்தொகை என்னை போன்று வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும்.

சொந்த காலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முதலமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

திருச்சி முத்தரசநல்லூர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி நதியா கூறுகையில்,

நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு எனது வங்கி கணக்குக்கு ரூ. 1000 வந்தது. அதை பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது.

எனது கணவர் நகைக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். எனக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.

எனது கணவரின் வருமானத்தில் சேமிப்பு என்பது இதுவரை இல்லை. வீட்டு வாடகைக்கும், சாப்பாட்டுக்குமே சரியாக இருக்கும்.

எனது மகளின் எதிர்கால தேவைக்கு இனிமேல் இந்த கலைஞர் உரிமைத்தொகையை சேமிக்கலாம் என இருக்கிறேன். முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

குளித்தலை தெற்கு மயிலாடி புவனேஸ்வரி கூறும்போது, எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். தினமும் வேலை இருக்காது.

ஆகவே குடும்ப செலவுகளுக்கு திணறும் விலை ஏற்படும்.

இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நானும் விண்ணப்பித்திருந்தேன். எனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் எனது வங்கி கணக்குக்கு ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளார்.

இது மகிழ்ச்சி அளிக்கிறது பெண்களுக்கு உரிமை தொகை வழங்கிய முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்.

ஏற்கனவே மகளிருக்கு இலவச பேருந்து கட்டணம் வழங்கி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பொருளாதார விடுதலையை பெறுவார்கள்.

முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்றார்.

Tags:    

Similar News