காதலியுடன் சுற்றுலா சென்று நீர்வீழ்ச்சியில் மூழ்கிய மாணவர் கதி என்ன? 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
- அதிர்ச்சியான காதலி, காதலனை காப்பாற்றுவதற்காக கையை கொடுத்து மீட்க முயன்றார்.
- தப்பி வந்த கல்லூரி மாணவி தனது காதலனை மீட்க கோரி சத்தம் போட்டார்.
வால்பாறை:
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சாஹர் (வயது21). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
இவருக்கும், இருகூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் காதலர்கள் 2 பேரும் நேற்று வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட்டில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு நீர்வீழ்ச்சியின் அருகே அமர்ந்து அதன் அழகினை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாஹர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான காதலி, காதலனை காப்பாற்றுவதற்காக கையை கொடுத்து மீட்க முயன்றார். ஆனால் அவரும் நீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டார்.
2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் கல்லூரி மாணவி அருகே இருந்த பாறையை பிடித்து உயிர்தப்பி கரையேறி வந்தார். ஆனால் சாஹர் நீர்வீழ்ச்சி தடாகத்தில் உள்ள சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி விட்டார்.
இதையடுத்து தப்பி வந்த கல்லூரி மாணவி தனது காதலனை மீட்க கோரி சத்தம் போட்டார். இதனை கேட்டு அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கல்லூரி மாணவரை மீட்க முயன்றனர். ஆனாலும் முடியவில்லை.
தொடர்ந்து வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, கல்லூரி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் இரவு வெகுநேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2-வது நாளாக இன்று நீரில் மூழ்கி மாயமான கல்லூரி மாணவரை தேடும் பணி நடந்தது.
இதுவரை அவரது கதி என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.