தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2024-11-10 11:45 GMT   |   Update On 2024-11-10 11:45 GMT
  • குட்டி ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை.
  • மீனவர்களை தாக்கி இங்கிருந்து செல்லுமாறு விரட்டி அடித்தனர்.

மண்டபம்:

ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய-இலங்கை கடல் எல்லையை ஒட்டியுள்ள நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது குட்டி ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து செல்லுங்கள் என மீனவர்களை எச்சரித்தனர். உடனடியாக 10-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் அவசரம், அவசரமாக கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

ஆனாலும் இலங்கை கடற்படை வீரர்கள் அத்துமீறி ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் தாவிக்குதித்து அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பறித்துக்கொண்டனர். அத்துடன் மீன்பிடி உபகரணங்கைளையும் சேதப்படுத்தினர். தொடர்ந்து மீனவர்களை தாக்கி இங்கிருந்து செல்லுமாறு விரட்டி அடித்தனர்.

இதனால் பீதியடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே விட்டு விட்டு கரைக்கு புறப்பட்டனர். அப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கூறி ராஜா, கீதன், சகாயராஜ், ஆகியோருக்கு சொந்தமான மூன்று மீன்பிடி விசைப்படகுகளையும், அதிலிருந்து டைட்டஸ், சரவணன், ஜெரோம், யாக்கோபு உள்ளிட்ட 23 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அதனை தங்களது ரோந்து கப்பலில் கட்டி இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவர்கள் இலங்கை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய இலங்கை கடற்படை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று விடுமுறை என்பதால் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.

இந்நிலையில் இலங்கையில் பாராளுமன்ற பொது தேர்தல் வரும் நாம் 14ஆம் தேதி நடைபெற உள்ளதால் ஒரே இரவில் 23 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும், இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

கடந்த 29-ந்தேதி கொழும்புவில் நடைபெற்ற இரு நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் மீனவர் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய சார்பில் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியான நிலையில் மீண்டும் 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது வேதனை அளிப்பதாக ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News