தமிழ்நாடு

அரியலூரில் கைதான பெண் உள்பட 3 பேர் தமிழகம் முழுவதும் கைவரிசை- போலீசார் விசாரணை

Published On 2024-10-24 08:53 GMT   |   Update On 2024-10-24 08:54 GMT
  • கும்பலை சேர்ந்தவர்கள் பல்வேறு இணைய எண்களில் இருந்து பேசியுள்ளனர்.
  • போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த இலுப்பையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 50). இவர் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், இவரை கடந்த ஆண்டு மே மாதம் மர்ம ஆசாமி ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகையில், வேவ் எப்.எக்ஸ். என்ற இணையதளத்தில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் வரும் என்றும், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பல்வேறு இணைய எண்களில் இருந்து பேசியுள்ளனர்.

இவர்களது பேச்சை நம்பிய கருணாமூர்த்தி மர்ம ஆசாமிகள் கூறிய பல்வேறு வங்கிக்கணக்குகளில் ரூ.71 லட்சத்து 28 ஆயிரத்து 770 செலுத்தியுள்ளார். பின்னர் அவர்கள் பணத்தை மோசடி செய்ததால் மனமுடைந்த கருணாமூர்த்தி அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் இணைய குற்றப்பிரிவு) விஜயராகவன், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


இதில், மோசடியில் ஈடுபட்டவர்கள் கோவை மாவட்டம், போத்தனூரை சேர்ந்த ரியாஸ்கான் (27), குனியமுத்தூரை சேர்ந்த ரம்யா (28), பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த மகேஸ்வரி (47) என தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 23 ஆயிரம், 4 செல்போன்கள், 1 மடிக்கணினி, 2 வங்கிக்கணக்கு புத்தகம், 4 ஏ.டி.எம். கார்டுகள், 4 சிம் கார்டுகள், 2 காசோலை புத்தகம், 4 போலி முத்திரை சீல்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று அரியலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான பெண் உள்பட 3 பேரும் தமிழகம் முழுவதும் நெட் ஒர்க் அமைத்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

கைதானவர்களின் இணையதளத்தில் பதிவு செய்து பணத்தை இழந்தவர்கள் குறித்த விவரத்தை சேகரிக்கவும், இந்த இணையதளத்தை முடக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இணையதளம் மூலம் பணத்தை இழந்தவர்கள் சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் போலீசாரை தொடர்பு கொள்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த மோசடியில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்று சிறிய முதலீடு மூலம் அதிக லாபம் பெறலாம் என்று கூறும் யாரையும் நம்பி பணம் அளிக்க வேண்டாம், இணைய மோசடிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். மேலும் உங்கள் வங்கி தொடர்பான தகவல்கள், ஓ.டி.பி.யை யாரிடமும் கூற வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News