சிறப்பு முகாம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 46 ஆயிரம் பேர் விண்ணப்பம்
- 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தன.
- சிறப்பு முகாம் வருகிற 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட திருத்தம் செய்வதற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தன.
அந்தந்த பகுதிகளுக்ககு உட்பட்ட பொதுமக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று திருத்தம் செய்வதற்கான மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதியேற்ற நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 46,167 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 31,279 மனுக்கள் 18 வயது நிரம்பிய இளம் வயதினர் ஆவர். அவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளனர்.
657 பேரின் பெயரை நீக்கவும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்வதற்காக 14,231 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
பெரம்பூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக 3,531 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். ஆர்.கே. நகர் தொகுதியில் 3,187 பேர் மனு கொடுத்தனர்.
சிறப்பு முகாம் வருகிற 23, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.