லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ரூ.12.41 கோடி பணம் பறிமுதல்- அமலாக்கத்துறை
- லாட்டரி மார்டினின் வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கப்பட்டது.
- இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
இவர் சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு 2 முறை மார்ட்டின் வீடு, அவருடைய அலுவலங்களில் வருமான வரிசோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி மார்டினுக்கு சொந்தமான 22 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.12.41 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.