தமிழ்நாடு

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- நீதிபதிகள்

Published On 2024-11-10 11:53 GMT   |   Update On 2024-11-10 11:53 GMT
  • நீதிபதிகள் முதலில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள பேரின் பவிலாஸ் தியேட்டர் அருகே ஆற்றுக்கு செல்லும் இறக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
  • சத்திரம்புதுக்குளத்தில் பச்சை நிறத்தில் மாறிய தண்ணீர் மாறியதை பார்வையிட்டனர்.

வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறானது நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

சமீப காலமாக தாமிரபணி ஆறு உற்பத்தியாகும் இடத்தில் வி.கே.புரம் நகராட்சியில் தொடங்கி நெல்லை மாநகர பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வரையிலும் சுமார் 60 இடங்களில் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதால், குடிக்கும் வகையில் இருந்த அந்த தண்ணீர் மாசுபட்டுவிட்டது.

இதனால் தாமிரபரணி ஆற்றை தூய்மையாக்க கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு முத்தாலங் குறிச்சி காமராசு மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள் கடந்த மார்ச் மாதம், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், படித் துறைகள், கல்மண்டபங் களை சீரமைக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன், புகழேந்தி அமர்வு இன்று தாமிரபரணி நதியை நேரில் பார்வையிட வருவதாகவும், அன்றைய தினம் அனைத்து அதிகாரிகளும் அங்கு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி இன்று காலை நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் மதுரையில் இருந்து நெல்லை வந்தனர்.

நீதிபதிகள் முதலில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள பேரின் பவிலாஸ் தியேட்டர் அருகே ஆற்றுக்கு செல்லும் இறக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட நீதிபதிகள் சந்திப்பு சிந்துபூந்துறை நதிக்கரை, உடையார்பட்டி நதிக்கரை, ராமையன்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் சத்திரம்புதுக்குளத்தில் பச்சை நிறத்தில் மாறிய தண்ணீர் மாறியதை பார்வையிட்டனர்.

பின்னர் டவுன் குறுக்குத்துறை பகுதியில் ஆய்வு செய்த நீதிபதிகள், கல்லணை பள்ளி அருகிலும், முருகன்குறிச்சி பாளையங் கால்வாய் ஆகிய இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தலைமையில் சுற்றுலா மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன், ராபர்ட் புரூஸ் எம்.பி., மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரபரணியில் ஆய்வு செய்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேலும், நிதி ஒதுக்கீடு, கால அளவு ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு செயல் திட்டத்தை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க நெல்லை ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்கான பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News