234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணியை தொடங்க வேண்டும்- பிரேமலதா
- கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்.
- தமிழகத்தில் சொத்து வரியை உடனே திரும்ப பெற வேண்டும்.
சென்னை:
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைந்து வருகிற 28-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதற்கு ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்துவோம்
* கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும். மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி, பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும்.
* கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமையை தடுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும் மழை பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் திட்டங்களை தீட்டி, சாலைகள் மற்றும் போக்குவரத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும்.
* தமிழகத்தில் சொத்து வரியை உடனே திரும்ப பெற வேண்டும்.
* கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடுகள் செய்வதை கைவிட்டு விட்டு, ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டினால் இரண்டு மாநிலமும் நீர் வசதி பெறும்.
* உயர்த்திய மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.
* ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றை எதிர்கொண்டு, வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை அமைத்து 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்றும், நம் தமிழ்நாட்டிற்காகவும், தமிழக மக்களுக்காகவும் கேப்டன் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும் என உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறு தே.மு.தி.க. கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.