மோசமான வானிலை- அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கம்
- விமானத்தில் அமைச்சர் உள்பட 77 பயணிகள் இருந்தனர்.
- அமைச்சர் உட்பட 77 பயணிகளும் பத்திரமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றனர்.
மதுரை:
கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டதின் வெள்ளிவிழா, வருகிற ஜனவரி 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 31-ந் தேதி மற்றும் ஜனவரி 1-ந் தேதி நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவில் கலந்து கொள்கிறார்.
இதுதொடர்பான முன்னேற்பாடு பணிகளை இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை புறப்பட்டார். அந்த விமானத்தில் அமைச்சர் உள்பட 77 பயணிகள் இருந்தனர்.
வழக்கம்போல் இன்று காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் தூத்துக்குடி விமான நிலையம் அருகே மோசமான வானிலை மற்றும் அதிக மேகமூட்டம் காரணமாக மதுரை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் உட்பட 77 பயணிகளும் பத்திரமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றனர். அமைச்சர் உட்பட 77 பயணிகளுடன் தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக திடீரென மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.