ஆட்டு மந்தைகளுக்கு இடையே அடைக்கப்பட்ட பா.ஜ.க.வினர்- துர்நாற்றம் வீசுவதாக புகார்
- ஆடுகள் தொடர்ந்து சத்தமிட்டு வருவதோடு, துர்நாற்றம் வீசுவதாகவும் பா.ஜ.க. மகளிரணியினர் புகார் தெரிவித்தனர்.
- மண்டபத்திற்கு அருகில் விற்பனைக்காக ஏற்கனவே 200 ஆடுகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 ஆடுகள் அங்கு அழைத்து வரப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்தும், குற்றவாளி தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சியை செய்வதை கண்டித்தும், தமிழ்நாடு பா.ஜ.க. மகளிரணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் இருந்து இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
முன்னதாக அங்குள்ள செல்லத்தம்மன் கோவிலில் மதுரை மாவட்ட பா.ஜ.க. மகளிரணி தலைவி ஓம்சக்தி தனலட்சுமி தலைமையில் மகளிரணியை சேர்ந்த 7 பேர் கையில் தீச்சட்டி ஏந்தி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர்.
மேலும் கண்ணகி நீதி கேட்டு போராடியபோது அம்மனுக்கு மிளகாய் வற்றல் அரைத்து பூசிய நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் மகளிர் அணியினர் மிளகாய் வற்றல் அரைத்தனர். அதேபோல் நிர்வாகிகள் கண்ணகி நீதி கேட்டு போராடியை நினைவூட்டும் வகையில் கையில் சிலம்பு ஏந்தி வந்தனர்.
தொடர்ந்து டிராக்டரில் தொடங்கிய பேரணிக்கு மாநில மகளிரணி தலைவர் உமாரதி ராஜன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட குஷ்பு உள்ளிட் பா.ஜ.க. மகளிரணியினர் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆடுகளை அடைத்துள்ள பகுதிக்கு அருகிலேயே பா.ஜ.க.வினர் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆடுகள் தொடர்ந்து சத்தமிட்டு வருவதோடு, துர்நாற்றம் வீசுவதாகவும் பா.ஜ.க. மகளிரணியினர் புகார் தெரிவித்தனர். ஆடுகளின் சத்தத்தால் மகளிரணி நிர்வாகிகள் கண்டன முழக்கமிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த மண்டபத்திற்கு அருகில் விற்பனைக்காக ஏற்கனவே 200 ஆடுகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 ஆடுகள் அங்கு அழைத்து வரப்பட்டன. இதனால் ஆடுகளுக்கு மத்தியில் கடும் துர்நாற்றம் உள்ள பகுதியில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாக, பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.