கனமழை எதிரொலி- மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க கால்வாய் அமைப்பு
- மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
- புளியங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான 'டானா' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றின் மாறுபாட்டால் தென் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
அடை மழை காரணமாக மதுரை நகரில் உள்ள ஆத்திக்குளம் கண்மாயில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. கரை பலவீனமாக இருந்தால் சிறிது நேரத்தில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதேபோல் புளியங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
இதனால் செல்லூர், அய்யர் பங்களா, ஆத்திக்குளம், நரிமேடு உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதைதொடர்ந்து, மதுரை செல்லூர் பகுதியில் நிரந்தரமாக வெள்ள பாதிப்பை தடுக்க, உபரி நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் 2 நாட்களாக இரவு, பகலாக நடத்தட்டு வந்தது.
இந்நிலையில், கால்வாயில் நேற்று இரவில் தண்ணீர் திறக்கப்பட்டது.
செல்லூர் கண்மாயில் இருந்து வைகை ஆற்றுக்கு செல்லும் இந்த கால்வாய் மூலம், பந்தல்குடி கால்வாயில் செல்லும் அதிகளவு தண்ணீரை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கண்மாயை சுற்றிய பகுதிகளில் தண்ணீர் தேங்குவதையும் தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.