தமிழ்நாடு

ஃபெஞ்சல் புயல்- மாமல்லபுரம் வந்தது தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை

Published On 2024-11-30 05:13 GMT   |   Update On 2024-11-30 05:13 GMT
  • புயல் எச்சரிக்கை காரணமாக இ.சி.இர், ஓ.எம்.ஆர் சாலைகளில் வாகனங்கள் இயக்கப்படவில்லை.
  • மாமல்லபுரம் கடற்கரை அருகில் 51 இருளர் குடும்பங்கள் குடில் அமைத்து தங்கியிருந்தனர்.

மாமல்லபுரம்:

ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் நிலையில், இன்று அதிகாலை கோவளம், நெம்மேலி, தேவநேரி, மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கூவத்தூர் உள்ளிட்ட கடலோரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புயல் எச்சரிக்கை காரணமாக இ.சி.இர், ஓ.எம்.ஆர் சாலைகளில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. அதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

 

மாமல்லபுரம் கடற்கரை அருகில் 51 இருளர் குடும்பங்கள் குடில் அமைத்து தங்கியிருந்தனர். அவர்களை வருவாய் துறையினர் மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைத்தனர். மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மாமல்லபுரத்தில் தீயணைப்பு வாகனம், பைபர்படகு, ஆம்புலன்ஸ், பெக்லைன் இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரம், டீசல் ஜெனரேட்டர், பாம்பு பிடிக்கும் கருவி ஆகியவைகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்வதால் கூடுதல் மீட்பு பணிகளுக்காக சென்னை ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் 50 பேர் மாமல்லபுரம் வந்துள்ளனர். கூடுதலாக ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் முன் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதலே மாமல்லபுரத்தில் மின் விபத்துக்களை தடுக்கும் வகையில் மின்சார சேவை நிறுத்தப்பட்டது. மக்கள் வெளியே வராமல் பாதுகாப்புடன் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தியதால், அனைவரும் வீடுகளில் முடங்கினர். சுற்றுலா பயணிகள் இன்றி அனைத்து புராதன சின்னங்கள் பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.

 

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி, பெருமாளேரி, மணமை, நெய்குப்பி, குழிப்பாந்தண்டலம், எச்சூர் பகுதி விவசாயிகளின் வாழை மரங்கள், காய்கறி பந்தல்கள் சில இடங்களில் காற்றில் முறிந்து விழுந்தது.

மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என ஒலிபெருக்கி மூலம் மீனவ குப்பங்களில் எச்சரிக்கை விடுத்ததால் மீனவர்கள் தங்கள் படகு, வலைகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

Tags:    

Similar News