தமிழ்நாடு (Tamil Nadu)

தீபாவளி பண்டிகை- சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது

Published On 2024-10-28 05:28 GMT   |   Update On 2024-10-28 05:28 GMT
  • சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று முதல் பயணம் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
  • நாளை பயணம் செய்ய 53 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி 30-ந் தேதி வரை 3 நாட்கள் 14 ஆயிரம் பேருந்துகள் இயக்க விரிவான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் செய்துள்ளது.

சென்னை கோயம்பேடு, மாதவரம் மற்றும் கிளாம்பாக்கம் பஸ் முனையங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதே போல பிற நகரங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் விடப்பட்டுள்ளன. சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் இன்று முதல் பயணம் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகள் குழப்பம் இல்லாமல் பயணம் செய்ய ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமான 2092 பேருந்துகளுடன் சிறப்பு பஸ்கள் 700 இயக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுவதால் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாக வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி, கடலூர், திருச்சி, சிதம்பரம், சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுகிறது. அரசு பஸ்களில் பயணம் செய்ய 1.25 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இன்று 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதில் சென்னையில் இருந்து 12 ஆயிரம் பேர் செல்கிறார்கள்.

நாளை பயணம் செய்ய 53 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதனால் வழக்கமான பஸ்களுடன் 2,125 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4,200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் முனையம் செல்வதற்கு மாநகர பஸ்கள் கூடுதலாக இன்று முதல் இயக்கப்படுகிறது. மேலும் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிறுத்தும் இடத்தில் இருந்து வெளியூர் பஸ்கள் புறப்படும் இடத்துக்கு 8 மின்சார பஸ்களும் இயக்கப்படுகின்றன.

பயணிகள் வசதிக்காக குடிநீர், ஏ.டி.எம். வசதி, தங்குமிடம் போன்றவை கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து இன்று முதல் வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதற்கேற்ப பஸ் வசதியினை அதிகாரிகள் செய்துள்ளனர். மேலும் தீபாவளி பயணம் மேற்கொள்கின்ற மக்கள் நெரிசல் இல்லாமல் சொந்த ஊர் செல்ல வசதியாக போலீசாருடன் போக்குவரத்துத் துறையும் இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

குறிப்பக சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க ரோந்து போலீசார் கூடுதலாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். கார் மற்றும் இதர வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதையொட்டி டிரைவர்-கண்டக்டர்கள் அனைவரும் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்குமாறு அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் மூலம் கிளை மேலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News