தமிழ்நாடு (Tamil Nadu)

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2024-10-28 08:42 GMT   |   Update On 2024-10-28 08:53 GMT
  • முத்துராமலிங்க தேவர் அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9848.98 சதுர அடி.
  • அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சுப நிகழ்ச்சிகள் நடத்திட மேடை வசதி, மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ந் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள "தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்" திறந்து வைக்குமாறும் தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தியும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதை ஏற்று, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்து ராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 28.10.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

 

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்றைய தினம் திறந்து வைத்தார்.

இந்த அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9848.98 சதுர அடி ஆகும். இவ்வரங்கத்தில் பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடம் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கான நிரந்தர நிழற்கூரை ஆகியவையும், பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடத்தில் 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் தனித்தனியாக வரிசையில் செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சுப நிகழ்ச்சிகள் நடத்திட மேடை வசதி, மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நவாஸ் கனி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News