யார் வரவுக்காகவும் இன்னெரு கட்சி வேலை செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை- பிரேமலதா விஜயகாந்த்
- சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து இன்று தமிழ்நாடே கேள்விக்குறியாக இருக்கிறது.
- எதிர்வரப்போகும் மழை வெள்ளத்திற்கு எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடும் இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
திருவள்ளூர் மாவட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் படுகொலைகள், பலாத்காரங்கள், கொலை, கொள்ளை என்று சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து இன்று தமிழ்நாடே கேள்விக்குறியாக இருக்கிறது. அதில், மாற்றுக் கருத்தே இல்லை.
பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் போன்று பல்வேறு விஷயங்கள் தமிழகத்தில் நடக்கிறது. இவை அனைத்தையும் கண்டிக்க வேண்டும். ஆனால், இதை தடுக்க வேண்டிய அரசு வெறும் வாய்வார்த்தைகளை சொல்லிக்கொண்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
எதிர்வரப்போகும் மழை வெள்ளத்திற்கு எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடும் இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று மக்கள் கேட்கின்ற கேள்வியை நானும் கேட்கிறேன்.
யார் வருவதற்காகவும் இன்னெரு கட்சி வேலை செய்ய வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. அவரவர்களின் கட்சி பணிகளை அவரவர்களின் கட்சிகள் செய்துக் கொண்டிருக்கின்றனர். எங்கள் கட்சிகளின் பணிகளை நாங்கள் செய்துக் கொண்டிருக்கிறோம். அதுபோன்று, திமுக, அதிமுக மற்றும் தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளும் அவரவர்களின் பணிகளை செய்துக் கொண்டிருக்கின்றனர்.
தேமுதிக- அதிமுக இடையே கூட்டணி தொடரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.