கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
- வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் இன்றும் சோதனை மேற்கொண்டனர்.
- சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை:
கோவையை சேர்ந்தவர் தொழில் அதிபர் மார்ட்டின். இவர் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
அவர் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் மார்ட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி இருக்கிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபரில் கோவை, சென்னையில் உள்ள மார்ட்டின், அவருடைய மருமகன், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்தது.
இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று சென்னை மற்றும் கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பகுதியில் இருக்கும் மார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் நடத்தி வரும் ஹோமியோபதி கல்லூரி உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. காலையில் தொடங்கிய சோதனையானது இரவு தாண்டியும் நீடித்தது.
இன்று காலை 2-வது நாளாக, வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையையொட்டி அவரது வீட்டின் நுழைவு வாயில் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பூட்டப்பட்டது. வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் இன்றும் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் வீட்டின் அருகே உள்ள அலுவலகம் மற்றும் மார்ட்டின் நடத்தி வரக்கூடிய ஹோமியோபதி கல்லூரியிலும் 2-வது நாளாக சோதனை நடந்தது.
கல்லூரியில் உள்ள அலுவலக அறைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அலசி ஆராய்ந்து சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சரவணம்பட்டி மற்றும் சாய்பாபாகாலனியில் உள்ள மார்ட்டினின் உறவினர்கள் 2 பேர் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் என்னென்ன ஆவணங்கள் கிடைத்தது என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த வழக்கு தொடர்பான சோதனைகள் முழுமை அடைந்த பின்னர் என்னென்ன ஆவணங்கள் சிக்கின என்ற அதிகாரபூர்வ தகவலை அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
சோதனையையொட்டி, சோதனை நடைபெற்று வரும் 3 இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.